BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Saturday, July 11, 2009

நாம் படைத்த உறவு

நமக்கென நமக்காக
எல்லா உறவுகளையும்
படைத்தான் நம் இறைவன்...
நமக்கும் ஒரு உறவை
படைக்கும் உரிமை கொடுத்தான்
நாமும் படைத்தோம்
நம் நட்பை படைத்தோம்...

நம்மில் நமக்கு இருக்கும்
நம்பிக்கையின் மறுபெயர்
நம் நட்பு..
மண்ணில் நாம் உள்ளவரை
நம்மில் நிலைத்திருக்கும்
நம் நட்பு...

தோழியின் தோழமை...

என்று நீ என்
தோழி ஆனாய்
என்று எனக்கு
தெரியவில்லை
அனால்
அன்று முதல்
நித்தம் என்
நினைவில் ஏதோ
ஓர் வடிவில்
நீ இல்லாமல் இல்லை...

இனிமையாய் பழகினாய்
என் இதயம் புகுந்தாய்
என் உள்ளத்தில் உதிப்பவைகளை
உள்ளபடி உன்னிடத்தில்
உரைக்கும் உரிமை கொடுத்தாய்...
புரிதல் வளர்த்தாய்
பகிர்தலின் பயனை உணர்த்தினாய்...

நீ அறியாமல்
நம் புன்னகையில்
நான் தொலைத்த
துன்பங்கள் பல..
உன்னால் என்
மனதில் மலர்ந்த
மகிழ்ச்சிகள்
பற்பல...

தோழியே
என் சுவாசம்
இந்த காற்றில்
உள்ளவரை
நான் என்றென்றும்
இருப்பேன்
உன் தோழனாய்...

???

நான் வசித்த கருவறையில்
எனக்கு முன் வசித்திருந்தாள்...
எனை வரவேற்க எனக்கு முன்
இவ் உலகம் வந்தாள்...
நான் புவியை தொட்டவுடன்
ஒரு பூவென தொட்டு உணர்ந்தாள்....

அதுவரை அனைவரது அன்பையும்
அளவில்லாமல் அனுபவித்தவள் அதில்
எனக்கு சிறிது பங்கு கொடுக்க
சின்ன சினம் கொண்டாள்...
சில நாட்களில் அவளது
அன்பு சிறையில் என்னை அடைத்து அணைத்தாள்...

பள்ளி அழைத்துச் சென்றாள்
பழக கற்றுக் கொடுத்தாள்
அன்பாய் அரானாய் காத்தாள்...
அழகாய் இருக்க கற்றுக் கொடுத்தாள்..
உள்ளம் பகிர்ந்தாள்...

காலங்கள் கரைய எங்கள் உறவு உறுதியானது...
ஈன்றவளிடம் உரைக்காததை இவளிடம் உரைத்தேன்..
கால் நூற்றாண்டாய் இவளுடன் நான் பகிர்ந்தது
இன்னும் பல நூற்றண்டுகளுக்கு என் நினைவில் இருக்கும்..
இவள் என் தமக்கை அல்ல
இவள் என் ஆன்மாவின் தோழி...

நட்புச்சிலந்திகள்

இனைய வளைக்குள்
வரும் அன்பர்களை
நண்பர்களாய் மாற்றி
அன்பினால் அகத்தினுள்
விழுங்கும் நட்புச்சிலந்திகள்
நாம்....

நீயும் நீரும்

நீயின்றி
நான் வாழ்வது
நீரின்றி
நிலம் வாழ்வது
போல்...

இனையதள நட்பு...

முகம் கானா
நண்பர்கள் நாம்
ஆனால்
அகம் நம்
அன்பின் ஆழம்
அறியும்...

நம்மிடையே எதிர்பார்ப்புகள்
எல் அளவும் இல்லை
அதனால்
ஏமாற்றங்களுக்கு வழியே இல்லை...

உலகில் பல புள்ளிகளில்
நாம் வாழ்ந்தாலும்
நட்பென்னும்
ஓர் புள்ளியில்
இணைகிறோம்..

இங்கு தொடங்கும்
நம் நட்பு
தொடரும்..
வளரும்..
வாழும்..
நாம் வாழும் வரை...

மலர் விற்கும் மொட்டு

ஒரு மொட்டு
மலர்களை
விற்பனை செய்கிறது...
பூ விற்கும் சிறுமி...

Friday, June 19, 2009

காதல்

விழிகளில் நுழைந்து
உள்ளம் பகிர்ந்து
இதயம் புரிந்து
உயிரை உயிரால்
உணர்வதே
காதல்....

Friday, June 12, 2009

நினைவலைகள்

நீ என்
அகம் நுழைந்ததும்
என் அகம்
உன் அன்பின் கடலானது...
ஆழ் கடலும் ஓய்ந்திருக்க
என் அகக் கடல் மட்டும் பொங்குவதேன்
நித்தம் என் நினைவலைகள்
உந்தன் இதயக்கரை
சேரத் துடிப்பதனலோ.....

Tuesday, May 26, 2009

மனதினுள் மழை

பெய்யன பெய்யும்
மழையில்
ஓர் குடையில்
உன்னுடன் இணைந்து
நான் நடக்கையில்
என் இதயத்தில்
இளஞ்சாரல்...

மழை கொணர்ந்த
குளிரில், வெப்பம்
நிறைந்த உன் சுவாசம்
என் சுவாசம்
செல்ல என்னுளே
ஓர் சிறு புயல்...

விண்ணில் மின்னிய
மின்னலை கண்டு
உன் விழிகள்
இமை மூடி
இமை திறக்க
என் விழிகளில்
ஓராயிரம் மின்னல்கள் ....

பெய்யன பெய்த
மழை சட்டென நின்றதும்
நீ என்
குடை அகன்றதும்
என் இதயத்தில்
சிறு இடி ...

மீண்டும்
ஓர் குடையில்
உன்னுடன் நடக்க
என் மனதினுள்
ஆசை மேகங்கள்
ஆயிரம் சூழ்ந்தன
விண்ணில் மழை வேண்டி...

உன்னால்
என் மனதினுள்
மழை பொழிய
விண்ணில்
மழை வருமோ...

கணவு

இம்மண்ணில் உன்னில்
மயங்கிய நான்
உன்னோடு இணைந்து
விண்ணில் பறக்கிறேன்
முகிலோடு மிதக்கிறேன்
நிலவை நிலத்திற்கு
அழைக்கிறேன்...

இவைகள் எல்லாம்
கணவே என்றெண்ணி
உறக்கத்திலிருந்து
விழித்து பார்க்கையில்
என் விழிகள்
கண்டது இமை முடிய
உன் விழிகளை...

எவ்வளவு நெருக்கத்தில்
நீ இருந்தாலும்
நான் என்
கண்களை மூடினால்
கணவாய் வருவது
நீ தானடி
எந்தன் கண்மணியே...

மாற்றம்

மாற்றமில்லாமல்
மாந்தர் அனைவரும்
விரும்புவது
மாற்றத்தை....
நமக்கான மாற்றத்தை...

நாம் விரும்பும் மாற்றங்கள்
நம்மில் தொடங்கட்டும்
நம்மில் தொடங்கும்
மாற்றங்கள்
இச்சமுதாயத்தை
அடையட்டும்...

இந்த சமுதாயம்
அடைந்திருக்கும்
மாற்றங்கள் அனைத்தும்
ஓர் தனி மனிதனின்
மனதில் உதித்த
மாற்றம் தானே...
நம்மில் தொடங்கும்
மாற்றமும் இச்சமுதாயத்தை
மாற்றும்...

நான்கு விழிகள்

நான்கு விழிகள்
ஒரு மொழி
பேசின....
உள்ளத்தில் ஒளிந்திருந்த
உரைக்க முடியா உணர்வுகளை
விழிகள் வெளிப்படுத்தி உணர்ந்தன...
உணர்வுகளை உணர்ந்த விழிகள்
இன்பத்தில் இமைகளை இமைத்தன....

கரு விழிகள் நான்கும்
வண்ணக் கனவுகள்
பல கண்டன....
அவ்விழிகளில்
இரு விழி உனது
இரு விழி எனது...

உயிரின் வலி

என்னில்
எனை மறந்து
உனை உணர்ந்ததால்
உள்ளம் உண்மை என
உரைப்பது உனை மட்டுமே....

மனம் விரும்பும் நீ
நினைவாய் மட்டும் இருக்கையில்
நித்தம் உனை கண் தேடுதே
கண்ணீர் இமை மோதுதே
இதயம் அதில் நனையுதே
உயிரும் உனை சேறுதே
உன்னால் தானே....

Tuesday, May 19, 2009

காத்திருக்கிறேன்.....

என் விழிகள்

உன்னை காணவே
விழிதிறிக்கின்றன....

என் செவிகள்
உன் மொழி கேட்கவே
சிலிர்ப்புடன் காத்திரிகின்றன....

என் இதயம்
உனை உணரவே
இன்று துடித்து கொண்டிருக்கிறது...

என்னுள் அணுவாய்
இருக்கும் நீ
கருவாய் மாறி

என் உயிராய் மலர்ந்து
உன்னோடு நான் வாழ்வது
எப்போது என் மகளே?

உனக்காக நான் காத்திருக்கின்றேன்....

Sunday, May 10, 2009

உணர்வுகளை உணர...

உன் அருகில்

நான் இருக்கையில்
உன்னால் என்னுள்ளே
எழும் உணர்வுகளை
உணர்ச்சிகளாய் உனக்கு உணர்த்த...
உன்னை நான் உணர...
நான் நினைத்தவுடன்
நிலா உதித்திட வேண்டும்....

எனது ஐம்பதாவது கவிதை -"சமர்ப்பணம்"

அணுவை கருவாக்கி

கருவை உயிராக்கி
உயிரை உடலாக்கி
உடலை எனதாக்கி
என்னை இவுலகம்
அழைத்து வந்தது
என் அம்மா.....

தம் செந்நீரை நன்னீராய் பாய்ச்சி
தம் உழைப்பை உரமாக்கி
தம்மை என்னுள் விதைத்து
என்னை விளைவித்தார்கள்
எனை ஈன்ற பெற்றோர்...

ஆண்டுகள் ஓடின...
நான் விளைந்தேன்
நற் பயிராய்....
நான் மலர்ந்தேன்
நன் மலராய்....

விளைவித்த பயிராய்
என்னை அறுவடை செய்யாமல்
மலர்வித்த மலராய்
எனை கொய்யாம்மல்
எனை பாசமுடன் என்றும் நேசித்தனர்..

நான் பயிராய் கருகாமலும்
நான் மலராய் உதிராமலும்
தன் அன்பை நீராய் என்றும் பாய்ச்சி
எனை அரண் போல் காக்கும்
என் பெற்றோர்க்கு
எனது ஐம்பதாவது கவிதை
சமர்ப்பணம்......

கடல் கடந்த உணர்வுகள்

நீ கடல் கடந்து வாழ்ந்தாலும்

நித்தம் என் கனவில் வருவது நீ தான்
நிலமும் நீரும் நம்மை பிரித்தாலும்
நம் நினைவுகள் நம்மை இணைக்கும்....

நான் உதிக்கும் நிலவை கண்டு
உன்னை நினைக்கையில்
நீ மயக்கும் மாலையில்
என்னில் மயங்குகிறாய் .....

இருவரும் இணைந்து
இயற்கையோடு
இணைய முடியா
தூரத்தில் நாம்....

நம்மிடையே தூரமும் காலமும்
அதிகம் என்றாலும்
அடி மனதில்
அழியா ஆன்மாவாய்
நமக்கு நாம்...

உள்ளே வெளியே

நீ

பிரசவ அறையின் உள்ளே
ஓர் தெய்வமாய்
நம் இறைவனை
ஈன்றெடுக்கையில்.....

உங்களையும்,
உலகில் உள்ள
அணைத்து தெய்வங்களையும்
பிராத்திக்கும் பக்தனாய்
வெளியில் நான்....

உன்னுடன் ஓர் உலா

உன் விரல் பிடித்து

உன்னுடன் உலா வருகையில்
என் விழி வழிகளுக்காக ஏங்கும்
உள்ளம் உவகையில் துள்ளும்
என் கால்கள் உனை நோக்கி நடக்கும்
உன் சுவாசம் என் சுவாசம் ஆகும்
உடலெங்கும் உற்சாகம் பரவும்
இவை அனைத்தும் இல்லாமல் போகும்
உன் விரல் உன்னை அறியாமல்
என்னிலிருந்து விடுபட்டால்......

பிராத்தனை

அவன் முதுமையில்

தன் மகன்
தன்னை போல்
முதியோர் இல்லத்தில்
பிராத்திக்க கூடாது என்று
அவள் இறைவனிடம்
பிராத்தனை செய்தாள்....

Tuesday, May 5, 2009

ஓர் உயிரின் கவிதை

உன்னை உணர்ந்தேன் என்னில் நானே
என்னை இழந்தேன் உன்னில் தானோ....
என்றும் இருப்பேன் உனக்கே உனக்காய்
எந்தன் இதயம் நீயே அன்பே..
விண்ணில் பறந்தேன் தன்னந் தனியே
உள்ளம் முழுதும் உந்தன் நினைவே...

அன்னம் மறந்தேன்
அகிலம் மறந்தேன்
அனைத்தும் நீயே என்றே உணர்ந்தேன்...
உன் உள்ளம் என்னும் மலரில் தானே
பனித்துளியாய் விழுந்தேன் நானே
உன் அன்பை இலங்கதிராய் உணர்ந்து
உன்னில் உன்னில் கரைவேன் நானே...

நினைவாய் நீ இருக்கையில்
நித்தம் உனை கண் தேடுது
கண்ணீர் இமை மோதுது
இதயம் அதில் நனையுது
உயிரும் உனை தேடுதே
உன்னால் தானே....
உன்னை உணர்ந்தேன் என்னில் நானே
என்னை உணர்வாய் உன்னில் நீயே....

இரவில் நீயும் கனவில் வந்தால்
விடியல் தள்ளி போகும் கண்ணே..
விழித்து பார்த்தல் விழியும் மனமும்
உன்னில் உன்னில் மயங்கும் மயங்கும்...
மனதில் மலர்வாய் வாடா மலராய்...
மலரவிடால் உதிர்வேன் சருகாய்...
இதயம் விரும்பும் இனிமை நீயே..
துன்பம் துறந்த, இன்பம் நீயே..

உன்னை உணர்ந்தேன் என்னில் நானே
என்னை உணர்வாய் உன்னில் நீயே....
விண்ணில் பறந்தேன் தன்னந் தனியே...
உள்ளம் முழுதும் உந்தன் நினைவே...

Friday, May 1, 2009

என் உணர்வின் உணர்வுகள்

எதிரில் வருவது
நீ என்றால்
எகிறிக் குதிக்குது
எந்தன் மனசு

எதிர் வந்த
நீ பேசாவிட்டால்
என்ன ஆகுமோ
என் மனசு...

உன்னை பார்த்த
என் விழிகள்
என்னை காண
மறுக்கிறதே..

எதை காண
கண் பார்த்தாலும்
உன் உருவே
தெரிகிறதே...

இன்ப இசை
எந்தன் செவியினுள்
சென்றாலும் உந்தன்
குரலே ஒலிக்கிறதே..

இத்தனை இன்பம்
தந்த நீ
உந்தன் இதயத்தில்
இடம் தரமாட்டாயா?....

எந்தன் மனதினுள்
நீ நுழைந்ததுமே
என்னுள்ளே
மாற்றங்கள் ஓராயிரம்...

அந்த மாற்றங்களை
நான் மறைக்க
நான் படும்
சிரமங்கள் பலவாயிரம்...

மாற்றங்களை மற்றவர்
உணரும் முன்னே
நீ முதலில்
உணர்ந்து விடு

என்னை உணர்ந்து என்
பிறப்பின் பயனை
நீ எனக்கு
தந்து விடு....

அவன்

அவன்
நீ பேசிய
வார்த்தைகளை புனைந்து
கவிஞன்
ஆனான்....

அவன்
உன்னை பல
வண்ணங்களில் வரைந்து
ஓவியன்
ஆனான்....

அவன்
உன்னை அவன்
மனதில் செதுக்கி
சிற்பி
ஆனான்...

அவன்
நீ அவனை
காதலித்த போது
உன் காதலன்
ஆனான்...

அவன்
நீ இன்னொருவனை
மணந்த போது
உன் அண்ணன்
ஆனான்...

அவன்
அவன் வாழ்வில்
என்ன
ஆனான்?

அதனை
நான்
மனநல மருத்துவராய்
ஆராய்கிறேன்...

தாயும் சேயும்

உணவைக் கண்டாலே
தாய்க்கு சேயின்
நினைவு ....
உணவை
ருசிக்கும் போது
சேய்க்கு தாயின்
நினைவு.....

நானும் புத்தன்

நானும் புத்தன் ஆனேன்
நீ
என்னோடு எப்போதும்
பேச வேண்டும்
என்ற ஆசையை
துறந்து...

Thursday, April 30, 2009

சென்னை அரட்டை அறை எண் ஏழின் தொடங்கு பாடல்

(இப்பாடல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "காதலிக்க நேரமில்லை" என்ற தொடரின் தொடங்கு பாடலான "என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு, உன்னை தேடி வாழ்வின் மொத்தம் அர்த்தம் தருவேன்" என்ற மெட்டில் பாட முயற்சித்து இயற்றியது)

எங்கெங்கோ வாழுகின்ற நண்பர்கள் நாம்
அனைவரும் கொஞ்ச நேரம் வாழும் அறை
சென்னை ஏழுதான்......
இங்கு வரும் இரவு நேரம் கொஞ்ச நேரம் தான்..
அந்த நேரம் இன்பத்திற்கு பஞ்சம் இல்லையே...
தத்தி தாவும் உந்தன் இதயம்
துள்ளி திரியவே இங்கு வந்து
இன்ப இசையாய் பாடல் பாடுங்கள்..
அறைக்குள் வரும் அனைவருமே
எந்தன் நண்பரே...ஒ...
மைக்கை பிடிக்க எவருக்குமே தடையும் இல்லையே ...
மனதில் உள்ள சுமைகளை இறக்கி வையுங்கள் ...
இங்கு வந்து எங்களோடு பேசி மகிழுங்கள்....ஒ....
சென்னை ஏழில் உள்ள அனைவருமே
நம் உள்ளம் விரும்பும் இனிய நண்பரே...
இங்கு மலர்ந்த எங்கள் நட்பிற்கு
என்றுமில்லை முற்றுபுள்ளியே...
களம் அமைத்த யாகூவிற்கும்.....
வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும்
நன்றி கலந்த வணக்கம் கூறி
வாழ்த்து சொல்வது... உங்கள் நண்பனே..

தனிமை பாடல்

(இப்பாடல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "காதலிக்க நேரமில்லை" என்ற தொடரின் தொடங்கு பாடலான "என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு, உன்னை தேடி வாழ்வின் மொத்தம் அர்த்தம் தருவேன்" என்ற மெட்டில் பாட முயற்சித்து இயற்றியது)


எதிரில் வருவது நீ என்றால்.... எகிறிக் குதிக்குது எந்தன் மனசு..
எதிர் வந்த நீயும் பார்க்காவிட்டால் என்னவாகுமோ எந்தன் மனசு...

உன்னை கண்ட நாள் முதல் எந்தன் விழிகள்
இன்று வரை என்னை காண மறுக்கிறதே...
எதை காண கண் கொண்டு பார்த்தாலும்
அங்கு தெரிவது உந்தன் உருவே ...
எந்தன் செவியில் நுழையும் இன்ப இசையில்
என்றும் ஒலிப்பது உந்தன் குரலே...
இத்தனை இன்பம் தந்த நீ எனக்கு
உந்தன் இதயத்தில் இடம் தர மாட்டாயோ.....

எதிரில் வருவது நீ என்றால் எகிறிக் குதிக்குது எந்தன் மனசு..
எதிர் வந்த நீயும் பார்க்காவிட்டால் என்னவாகுமோ எந்தன் மனசு...

என் இதயத்தில் நீ நுழைந்ததுமே
என்னுளே மாற்றங்கள் ஓராயிரம்....
மாற்றங்களை நான் மறைக்க
நான் படும் துயரங்கள் பலவாயிரம்...
மற்றவர்கள் அதனை உணர்வதற்குள்
நீ உணர்ந்தால்
என்னுளே இன்பம் மட்டும் பலவாயிரம்.....

உன் நினைவை கொண்ட தனிமை இனிமையே ...ஒ.....
நம் இளமை கண்ட இனிமை அருமையே..ஒ.....

எதிரில் வருவது நீ என்றால் எகிறிக் குதிக்குது எந்தன் மனசு..
எதிர் வந்த நீயும் பார்க்காவிட்டால் என்னவாகுமோ எந்தன் மனசு...

Tuesday, April 21, 2009

முதல் மாற்றம்

அகவை பதினாறில்
பல நாள் உன்னை காண்கையில்
ஓர் நாள் உன் விழி என்னிடம்
ஓர் மொழி பேசியது....
என் விழி என்னை
கேட்க்காமல் மறுமொழி கூற..
என் உள்ளத்தின்
உவகையினால் உடல் எங்கும்
ஓர் உற்சாகம்...
இதனால் என்னுள்ளே
ஏற்பட்டது முதல்
ரசாயன மாற்றம்.....
காலங்கள் கரைந்து ஓடின...
அந்த காலத்தோடு
நீயும் கரைந்து போனாய்...
நாட்கள் பல ஆனாலும்
மறக்கவில்லை அந்த
முதல் மாற்றம்...
ஆனால்
இவ் உலகில்
மாற்றம் ஒன்றே
மாற்றம் இல்லாதது...
நான் மாறித்தான்
நான் மறந்துதான் ஆக வேண்டும்
அந்த முதல் மாற்றத்தை
எங்கோ எனைகான
எனக்காக காத்திருக்கும்
என்னவனுக்காக........

Sunday, April 19, 2009

என் விழியில் நீ

உணை கண்ட
என் விழிகள்
எனை காண
மறுக்கிறதே...

எதை காண
பார்த்தாலும் அதில்
உன் உருவம்
தெரிகிறதே...

என் விழியில்
விழுந்த நீ என்
கருவிழியை விட்டு
பிரியலையே...

நான் காணும்
உருவங்கள்
நம்மை பிரிக்க
விரும்பலையோ...

அதன் காரணமாய்
என் விழிகளுக்குள்
அவை வர
விரும்பலையோ...

கோவிலில் காவல்

மதங்களின் பெயரால்
மனிதர்கள் மோதிக்கொண்டதால்
மரணங்கள் பல ....
இதனால்
மனிதர்களை காக்கும்
கடவுள்களின் கோவில்களை காக்க
மனிதர்கள் பலர்...

பிரிவில் வருத்தம் இல்லை

உனக்காக
என்னை நான்
முழுதாய் மாற்றி
என் அன்பை
நான் முழுதாய்
வெளிபடுத்தியும்
நீ என்னை புரிந்துகொள்ளாதது
என் தவறல்ல....
என்னை நீ பிரிகையில்
எனக்கு வருத்தம் இல்லை..

Saturday, April 18, 2009

ஒரு பெண்ணின் முதல் கவிதை

அவனுடன்
பழகிய நாட்களில்
இன்று தான் அவன்
என் அப்பாவை விட
என் அண்ணனை விட
என் செல்ல தம்பியை விட
அழகாய் தெரிந்தான்....
அவன் தான்
எனக்காக பிறந்த
என்னவனோ...

முதல் அன்பளிப்பு

உன் தூய அன்பின்
மறு வடிவமாய்
உன் சக்தியை மீறி
நீ எனக்கு கொடுத்த
முதல் அன்பளிப்பை விட
அதை உன் கரங்களில் இருந்து பெறுகையில்
உன் தொடு விரல்
உன்னை அறியாமல்
என்னை முதன்முதலாய்
தீண்டியதன் இன்பமே
என்றைக்கும்
என் வாழ்வில்
நீ கொடுத்து
நான் பெற்ற
மிகப் பெரிய பொக்கிஷம்......

Friday, April 17, 2009

ரோஜா

நீ கொடுத்த
ரோஜா வாடுவதற்குள்
இன்னொருவனுடன்
நீ...
என் தோட்டத்திலும்
ரோஜாக்கள் ஏராளம் ...
அவை அனைத்தும்
எனை காண
எங்கோ காத்திருக்கும்
என்னவளுக்கு மட்டும்....

பனித்துளி

என்னை பிரிகையில்
உன் பாதத்தில்
பனித்துளி..
என் கண்களிலிருந்து....
இன்னுமோர் துளி
வானில் இருந்து...
கண்ணீர் குளம்
உன் கண்களில்...

கடலை

பல வண்ணங்களில் உடை அணிந்து
வர்ணனைகள் பல செய்து
அர்த்தமில்லா வார்த்தைகள் பல பேசி
இருவரின் அன்றாட வாழ்க்கையை
ஒருவருக்கொருவர் சரித்திரமாய் பதிவு செய்து
மற்றவற்கு சற்றே தரித்திரமாய் காட்சியளித்து
மோகத்தீயில் வறுபட்டு சற்றே கருகுவதே
கடலையாம்....

அவர்கள்

அவர்கள் அனைவரும்
என்னை எள்ளி நகையாடுகையில்
என் முகம் மட்டும்
வாடுவதை கண்டு
அவர்கள் முகமும் மனமும்
உற்சாகத்தில் மலரும்..
நான்
எதனாலோ மனம்
நோவதை கண்டு
என்னினும் வேகமாய்
அவர்களின் மனம்
நொறுங்கும்....
அவர்கள் என் நண்பர்கள்....

Saturday, April 11, 2009

ஹைக்கூ

நிலா கண்ட
நிலவுகள்
உன் கண்கள்...

கீழ் நோக்கி அடித்தாலும்
மேல் நோக்கி எழும்
பந்து நான்..

கற்றது கை மண் அளவு
கல்லாதது உலக அளவு
உன்னை பற்றி...

மனிதன் படைக்கும்
தெய்வம்
குழந்தை..

புரிதல் பிரிதல்

இருவருக்குள்
பிரிதல் நிகழாமலிருக்க
புரிதலே காரணம்...
பிரிதல் கூட
புரிதலின் வடிவம்தான்
இனி புரிந்துகொள்ள முடியாது
என்ற புரிதலின்
முடிவுதானே
பிரிதல்...

என் உணர்வுகளை உணர..

நானுணை கண்ணே,
முத்தே, மணியே
என்றெல்லாம் அழைக்கமாட்டேன்..
இவை அல்ல நீ எனக்கு..

என் உயிரை
உயிரோடு
வைத்திருக்கும்
உயிர் நீ...

உன்னிடம் உரைக்க
என் உள்ளத்தில்
உண்டு ஆயிரமாயிரம்
உணர்வுகள்....

உணர்வுகளை உரைக்க
இவ் உலகில்
வார்த்தைகள்
இல்லை...

உணர்வுகளை உணர
உன் உளமார
என் உள்ளத்தினுள்
வந்துவிடு

வந்துணர்ந்து
நம் வாழ்க்கைக்கான
புதிய பரிமாணத்தை
தந்துவிடு....

நீயும் கடவுள்

கடவுள்
இவ்வுலகை
படைத்தார்..
நீயும் கடவுள்தான்
எனக்காக
ஓர் உலகை
படைத்தாயே...

கனாவில் உன் வினா

ஆதவன் உதிக்கும் முன்னே
உன் புகைபடத்தில் விழித்து
பகலெல்லாம் உனக்காக உழைத்து
மயக்கும் மாலையில்
உன் விழிகளை
நேரில் சந்தித்து
காதல் மொழி பல பேசி
இன்பத்துடன் தனியே
உறங்க சென்றால்
கனவில் நீ....

உனை கண்டு கனவில்
நான் புன்னகைக்க
"என் ஞாபகமா?"
என வினவுகிறாய்
உன்னை மறந்தால்தானடி
ஞாபகப்படுத்த.....

உயிர் கொடுத்த உயிர்களின் நிலை...

ன்பினால் பிறந்தான்
னந்தமாய் வளர்ந்தான்
ன்பம் மட்டுமே அளித்தனர்
ன்றெடுத்த பெற்றோர்....
ள்ளம் விரும்பிய கல்வி
தியம் நிறைந்த வேலை
எல்லாம் அடைந்து
ற்றத்துடன் வாழ்கின்றான்..
ம்பொன் சிலையாய் மனம் விரும்பிய மனைவி என
ப்பற்ற வாழ்க்கையை கொடுத்தனர் பெற்றோர்..

வை வயதில் பெற்றோர் வாழும்
முதியோர் இல்ல முகவரியை மறந்தானே..
ம் இவனை படைத்த இருஉயிர்கள்
இவனுக்காக அங்கு பிராத்தனையில்.....

எனை பிரிந்த என்னுயிர்

முதன் முதலில்
உன் விழிகளை
கண்ட என் கண்ணிமைகள்
இமைக்க மறந்தன....
இமைக்க மறந்த
இமைகளை மனம்
இமைக்க உரைத்தது.....

உன் சுவாசம்
கலந்த காற்று
என் சுவாசம் சென்றது...
உன் சுவாசம் உணர்ந்த
என் இதயம்
துள்ளி துடித்தது...
துள்ளி துடித்த
இதயத்தினால் அங்கம்
இயல்பை இழந்தது....

இதனிடையே
உன் விழிகள்
பேசிய மொழிகளை
என் விழிகள்
உணர்ந்தன..
உணர்ந்த விழிகள்
உள்ளத்திற்கு
உன் செய்தி
சொன்னது...
சொன்ன செய்தி
கேட்ட அங்கம் அனைத்தும்
மெல்ல இயல்பை
அடைந்தன...

நல்ல வேளை
பூவியை விட்டு
போகவிருந்த என் உயிர்
உன்னை அடைந்தது...
ஆம்
உன்னை
பார்த்த நொடிகளிலே
என் உயிர்
என்னை பிரிந்து
உன்னை சேர்ந்தது...

முக்காலம்

உனை கண்ட நொடியிலிருந்து
நினைவுகளில் உனை நிறுத்தி
நிகழ்வுகளில் உனை பொருத்தி
நிகழ்காலத்தை வசந்தமாக்கி
பசுமையான இறந்த காலத்தை
பதிவு செய்தேன்....
என் எதிர் காலம்
உன் பதிலில்தானடி
ஒளிந்திருக்கிறது....

விடுதலை

நான்
எல்லோரும் போல்
எச்சிறையில் அடைத்தாலும்
விடுதலை கோருவேன்
சுதந்திரம் அடைவேன்....
ஆனால்
நீ என்னை
உன் மனச்சிறையில்
அடைதால் மட்டும்
என்றும் என்றென்றும்
மாட்டேன்...

நிலா கண்ட நிலவுகள்

விண்ணில் உதித்துகொண்டிருந்த நிலா
மண்ணில் உன்னை கண்டது...
இரவில் முழுதாய் உதித்து
இரு நிலவுகளாய்
உன் கண்களை ரசித்தது...
நீ கண்மூடி உறங்கியதை
கண்டு சினமுற்ற நிலா
சூரியனை உதிக்க அனுப்பியதோ....

Saturday, April 4, 2009

முடிவும் தொடக்கமும்

எல்லா தொடக்கங்களின்
முடிவு
முடிவுதான்..
ஒவ்வொரு முடிவிலும்
ஒரு தொடக்கம்
ஒளிந்திருக்கும்...

மனதிற்கு ஒப்பாத
முடிவில் ஒளிந்திருக்கும்
தொடக்கத்தை அறிந்து
முயன்றால்
மனது விரும்பும்
முடிவை அடையலாம்...

செயலின் தொடக்கம்
சிந்தனையின் முடிவுதானே....

உன் பிம்பம்

நீ
என் கண்களில் நுழைந்து
என் அணுக்களை பிளந்து
என் உயிரினில் நீ கலந்ததால்
என் கண்ணாடியில்
எனை நான் பார்க்கும் போது
உன் பிம்பம்
தெரிகிறதோ...

முதல் மற்றும் இறுதி சமர்ப்பணம்

என்னில் உனை உணர்ந்ததால்
உன்னில் எனை உணர
நான் முயல
உன்னில் வேறு யாரோ...
இது யார் தவறு?...
யவர் தவறும் இல்லை....
இயற்கையான நிகழ்வு...
இன் நிகழ்வை
என் நினைவிலிருந்து
அகற்றுவதே இதுவரை
எனை காணமல்
எங்கோ எனக்காக
வாழும் என்னவளுக்கு
நான் செய்கும்
முதல் சமர்ப்பணம்....
உனக்கு செய்கும்
இறுதி சமர்ப்பணம்....

போட்டி

என் ஆன்மாவும்
என் இதயமும்
போட்டிட்டால்
வெல்வது யார்?
கண்டிப்பாக நீ தான்....
இரண்டிலும் முழுவதுமாய்
இருப்பது நீ தானே.....

Sunday, March 29, 2009

நட்பில் மறந்த நினைவுகள்

எண்ணிப் பார்க்கையில்
எண்ணத்தில் தோன்றவில்லை
என்று நாம்
நண்பர்கள் ஆனோம்
என்று

நம்முள் ஏற்பட்ட
சில நிகழ்வுகள்
நல்ல நினைவுகளாய்
உருபெற்று நம்
நட்பிற்கு வித்திட்டது

வித்திட்ட நிகழ்வுகள்
நம் நினைவிலில்லை
காரணம் வித்திட்ட
அக்காலத்தை விட
நம் நட்பு
வளரும் இக்காலம்
வசந்த காலமாய்
இருப்பதனாலோ......

காதல்

காதல்
கண்ணை கண்
நோக்குவதால்
பிறப்பதில்லை..
காதல்
மனதை மனதால்
உணர்வதால்
பிறந்து வளர்வதுவே
காதல்...

என்னென உரைப்பது....

இன்று தான்
நீ என்
அன்பை உணர்ந்தாய்
என் பிறப்பின்
பயனை அடைந்தேன்.....
இன்று என்
அகவை அறுபது......

வாழ்வில் இன்பம்

கற்கும் காலத்தில்
கல்லாமல் அதன்
காரணமாய்
வளம் கொள்ளாமல்
போனவன் வாக்கு
"நான் வாழ்வில் வெற்றிபெறவில்லை
என் வாழ்வில் திருப்தியில்லை"

நற் கல்வி
கற்று களம்
பல சென்று
வளம் பல
பெற்றவன் வாக்கு
"நான் வாழ்வில் வெற்றிபெறவில்லை
என் வாழ்வில் திருப்தியில்லை"

வாழ்க்கையில்
வெற்றிபெற
வாழ்க்கை ஓர்
போட்டியோ போராட்டமோ
இல்லை....

வாழ்க்கை
ஓர் வாழும் காலம்...
ஓர் வாழும் களம்...
வாழும் களத்தில்
வாழும் காலத்தில்
மனம் விரும்பும்
நல்லவைகளை இலக்காக்கி
நல் வழியில்
முயன்று அடைந்தால்
மனதில் ஓர்
உணர்ச்சி அது மகிழ்ச்சி....

இலக்கை அடைந்ததும்
மட்டும் மகிழாமல்
இலக்கை முயல்வதிலும்
மகிழ்ச்சியை கண்டால்
வாழ்வே இன்பமயம்....

உயிர்

வாழவைக்கும்
உயிர்
சாகப் பிறந்தது
மரணம்
உயிரின் கடமை...

இலக்கணமும் இலக்கியமும்

நமக்கெண
நல் இலக்கணங்களை
நாம் வகுத்து
அதன்படி வாழ்ந்தால்
நம் வாழ்வும்
ஓர் இலக்கியம்தான்..

Saturday, March 14, 2009

மன்னிப்பு

எல்லா தவறுகளுக்கும்
மன்னிப்புண்டு
அனால்
மனதை கொன்றதற்கு
மன்னிப்பில்லை......
நடை பிணம்
யாரையும் மன்னிக்காது.

அன்பு

அன்பு
உணர்த்தப்படுவது அல்ல,
உணரப்படுவது.

நிகழ்வுகள் நினைவுகள்

நேற்றைய நிகழ்வுகள்
இன்றைய நினைவுகள்

நேற்றைய நினைவுகள்
இன்றைய அனுபவம்

நேற்றைய அனுபவம்
இன்றைய நடைமுறை

மனிதன்

சந்தர்பத்தை எதிர்பார்பவன்
சாதாரண மனிதன்
சந்தர்பத்தை ஏற்படுத்துபவன்
சாதிக்கும் மனிதன்

Friday, March 6, 2009

நிலவும் சூரியனும்

அன்று
பகலில்
குளிர்ந்த
நிலவாய்
நீ

இன்று
இரவில்
தகிக்கும்
சூரியனாய்
நான்

அம்மா

அன்றும்
இன்றும்
என்றென்றும்
நான்
நானாய்
இருப்பதன்
காரணம்
என் அம்மா

Thursday, March 5, 2009

சாயல்

என் கண்ணுள்ளே
நீ நுழைந்ததுமே
என் இதயத்தில்
உன் சாயல்

உன் சாயலிலே
கண்ட கணவெல்லாம்
மறந்தேனே
நான் சிறிதாய்

முழு மனதாய்
நினைத்ததெல்லாம்
மறந்தேனே
அரை மனதாய்

உன் சாயலிலே
உன் நோக்கி
சாய்ந்தேனே
நான் முழுதாய்

நடக்கும் சாலையிலும்
மறக்கவில்லை
மறையவில்லை
உன் சாயல்

மழை கொணர்ந்த
சாரலிலும்
கண்டேனே
உன் சாயல்

நான் கண்திறந்து
காணும் பொருளெல்லாம்
கண்டேனே
உன் சாயல்

நான் கண்மூடி
சாய்கையிலும்
என் கண்ணுள்ளே
உன் சாயல்

Monday, March 2, 2009

வாழ்க்கை

எதிர்பாரததை
எதிர்பார்த்து
எதிர்படுவதை
எதிர்கொண்டு
வீழாமல்
வாழ்வதுவே
வாழ்க்கை